நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு ஆளும் தரப்பு ஒப்புக்கொள்ளாததால் இரு அவைகளும் அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நேற்றைய நாடாளுமன்றப் பணிகள் ஏறக்குறைய முடங்கின.
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் மாநிலங்களவை கூடியது. அப்போது, முந்தைய கோரிக்கைகளோடு, ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்தும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு இரு அவைகளும் கூடியது. அப்போதும் அமளி ஏற்பட்டது. எனவே இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைககப்படுவதாக அறிவிக்கப்பட்டது.