திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் நோக்கிச் சென்ற ‘சங்கர்’ என்ற தனியார் பேருந்தை (TN 45BP 5345), எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து மிகவும் அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர், “இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள், பயமாக இருக்கிறது. இல்லையென்றால் என்னை இறக்கிவிடுங்கள்” என்று ஓட்டுநரிடமும் நடத்துநரிடமும் கூறியுள்ளார். ஆனால், ஓட்டுநர் அன்புராஜ் வேண்டுமென்றே மேலும் ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டியதாகத் தெரிகிறது. அந்தப் பயணி தொடர்ந்து இதைக் கண்டித்துக் கொண்டே வந்துள்ளார்.
பேருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை அடைந்ததும், ஆத்திரமடைந்த ஓட்டுநர் அன்புராஜ், அந்தப் பயணியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, சரமாரியாகத் தாக்கியுள்ளார். வயதானவர் என்று கூடப் பாராமல் பொதுமக்களின் முன்னிலையிலேயே ஓட்டுநர் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாநகரில் சமீபகாலமாக அரசு பேருந்துகளை விடத் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், அவற்றின் வேகத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதியவர் மீது தாக்குதல் நடத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனியார் பேருந்துகளின் வன்முறையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

