தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நரியம்பாளையம் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான புதிய பேருந்து நிலையத்தைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.2026) திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையத்திற்குப் பதிலாக, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 6.50 ஏக்கர் பரப்பளவில் இந்த ‘A’ வகுப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த துணை முதலமைச்சர், அங்கிருந்து பேருந்து சேவைகளையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நவீன பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 பேருந்துகளை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக 120 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பு அறைகள், குடிநீர் வசதி மற்றும் 4 இடங்களில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, வாகனங்களை நிறுத்தத் தனித்தனியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள், பொருட்கள் பாதுகாப்பு அறை, முன்பதிவு மையம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பட்டுக்கோட்டை நகரில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

