Skip to content

மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரி அடித்துக்கொலை

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் (53) கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நாகராஜ் தனது மகள்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

கடந்த 27-ந் தேதி நாகராஜின் மகள்வழி பேத்தியின் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. இதனால் நாகராஜ் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார். இதையறிந்த இதே ஊரைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் ஜெய்சங்கர்(27) டிரைவர். தனக்கும் மது வாங்கித் தரும்படி கேட்டார். ஆனால் அவரை நாகராஜ் மதுவிருந்துக்கு அழைக்கவில்லை. இதனால் அன்று இரவில் மீண்டும் தனக்கு மது வாங்கித் தரும்படி ஜெய்சங்கர் கேட்டு அடம்பிடித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகராஜை சரமாரி குத்தியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்த உலக்கையால் ஜெய்சங்கர் சரமாரி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு ஜெய்சங்கர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பன், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ஜெயசங்கரை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!