அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இறவாங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய போது, நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள மரத்தடியின் நிழலில் நின்றுள்ளார்.
அப்போது அந்தப் பேருந்து நிலையத்தில் இருந்த நான்கு பேர் போதையில் ஜாலியாக அடித்த அரட்டையை அங்கே நின்றிருந்த சிவகுமார் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அங்கிருந்தவாலிபர்கள் சிவகுமாரிடம் எதற்காக வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டுள்ளனர்.
இதற்கு சிவகுமார் ஜாலிக்காக எடுப்பதாகவும் இது தனது ஹேபிட் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்களுக்கும் சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஏட்டிக்குப் போட்டியாக பேச்சு வளர்ந்ததாக தெரிகிறது.
ஆத்திரமடைந்த நான்கு இளைஞர்களும் சிவகுமாரை கட்டையால், ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய சிவகுமார் சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் ஏறி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார். பேருந்து உள்ளேயும் புகுந்த அந்த கும்பல் இளைஞர் சிவகுமாரை சரமாரியாக தாக்கும் காட்சியை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தாக்குதலில் தலையில் காயம் அடைந்த வாலிபர் சிவக்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வாலிபரை தாக்கிய குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S உத்தரவின்படி ஆண்டிமடம் காவல்துறையினரால் நேற்று கைது செய்தனர்.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முன்னுரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 1. கார்த்தி (வயது 26) , 2.வினோத் குமார் (வயது 23) 3.கலியமூர்த்தி (வயது 23) , மற்றும் 4.செல்வமணி ( வயது 20) ஆகிய நான்கு பேரும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.