கரூர், புன்னம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்: பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் அருகே கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக புகலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி விதிகளை மீறி சில கல்குவாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சதீஷ்குமார் நிறுவனத்தால் 1.46.25 ஹெக்டேர் பரப்பளவில் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தனியார் திருமண மண்டபத்தில் நடத்தியது.
அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குவாரி அமைக்க விரும்பும் தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய அப்பகுதி விவசாயி ஒருவர், குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் பெட்ரோல் நிறுவனத்திற்கு செல்லும் குழாய் உள்ளதால், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கக் கூடாது என்றார். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி இன்றி ஆவணங்களை மாற்றி குவாரி அமைப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுபோல், சமூக ஆர்வலர்களும் வரவிருக்கும் கல்குவாரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

