சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று காலை முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறியதால் மாலில் இருந்த பொதுமக்கள் என்னவோ ஏதோ என அலறியடிடுத்து ஓடினர். ஊழியர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மாலில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் சாலை ஓரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஷாப்பிங் மாலில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அண்ணா சாலை பகுதி, ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

