கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் இதனைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எப்போது முழுமையடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். எதிர்காலத்தில் அறிவுள்ள சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது போல, கல்வியாளர்கள் அதிகம் வசிக்கும் கோவையில் இந்த நூலகம் அமைய 2024-ல் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் உருவாகும் இதற்காக, விமான நிலையத் தடையில்லாச் சான்று உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 245 கோடி ரூபாய் கட்டிடத்திற்கும், 5 கோடி ரூபாய் கணினி சாதனங்களுக்கும், 50 கோடி ரூபாய் புத்தகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒன்றிணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை பெரியார், இந்தியா முழுமைக்கும் ஒரு மாபெரும் தலைவராக விளங்குவதால் இக்கட்டிடத்திற்கு ‘பெரியார் அறிவுலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 1000 பேர் அமரக்கூடிய கலையரங்கம், டிஜிட்டல் உலகம், அறிவியல் மையம், குழந்தைகள் உலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவு, தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கான தனிப்பிரிவுகள், போட்டித் தேர்வுப் பிரிவு, இதழ்கள் பிரிவு மற்றும் நிர்வாக அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. லிப்ட்கள், நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் மாலை நேரங்களில் வெளியே அமர்ந்து படிப்பதற்கான வசதிகளும் உண்டு. வரும் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். அதன்படி, பிப்ரவரி 10 முதல் 28-ம் தேதிக்குள் முதலமைச்சரால் இது திறந்து வைக்கப்படும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவையைத் தொடர்ந்து திருச்சி, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதேபோன்ற நூலகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ எழுப்பிய செம்மொழிப் பூங்கா குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், பெரிய திட்டங்கள் என்பதால் ஒரு சில வாரங்கள் காலதாமதம் ஏற்படுவது இயல்பு என்றும், விரைவில் பணிகள் முடியும் என்றும் கூறினார்.
அவிநாசி மேம்பாலம் மற்றும் இதர சாலைத் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், “மேற்குப் புறவழிச்சாலை முதற்கட்டப் பணிகள் 90% முடிந்துள்ளன. இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 368 கோடி ரூபாய் நிதி அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் இல்லை எனக் கூறினாலும், நாங்கள் அதனை வலியுறுத்தி வருகிறோம். மெட்ரோ திட்டம் ஒரு முடிவுக்கு வரும்போது, அவிநாசி மேம்பாலமும் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும். முந்தைய ஆட்சியின் திட்ட மதிப்பீடு மற்றும் கடன்களைச் சமாளித்துத் தரமான கட்டுமானங்களை வழங்கி வருகிறோம்,” என்றார். இறுதியாக அரசியல் குறித்த கேள்விக்கு, “2026-ல் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி தொடரும்” எனத் தெரிவித்தார்.

