தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அடுத்த வாரம் சனிக்கிழமை (20ம் தேதி) நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நாகை அவுரித்திடலில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள தவெக தரப்பில் போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், தவெக அனுமதி கேட்ட அதேநாளில் திமுகவினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நாகையில் தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மாவட்ட எஸ்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் கூறுகையில், 20ம் தேதி நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு மாற்று இடம்கோரி 7 இடங்களை தவெகவினர் முன்வைத்துள்ளனர். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. போக்குவரத்து, பொதுமக்கள் பாதிப்பை கருத்தில்கொண்டு ஆய்வு செய்து அனுமதி தரப்படும்’ என்றார்.