திருச்சி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ இன்று மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-ஐ சந்தித்து உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் விவரத்தை துரைவைகோ கூறியதாவது…
இன்று (12.08.2025) மாலை, ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, இதற்கு முறையாக பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை கடிதம் கொடுத்தேன்.
இந்தச் சந்திப்பில், ஸ்ரீரங்கம் கோயில் ஒரு மரியாதைக்குரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகத் திருத்தலமாகவும், கட்டிடக்கலையில் அற்புதங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயிலாகவும் திகழ்வதை எடுத்துரைத்தேன்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில், 2014ஆம் ஆண்டு இந்திய அரசால் யுனெஸ்கோவின் தற்காலிக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், இதற்கு அடுத்த கட்ட
நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினேன். யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ள 10 தகுதிகளில் ஒரு தகுதியை பூர்த்தி செய்தாலேயே இந்த உலக பாரம்பரிய சின்னம் தகுதி கிடைக்கும் சூழ்நிலையில், ஶ்ரீரங்கம் திருத்தலமானது இவற்றுள் நான்கு தகுதிகளை பூர்த்தி செய்கிறது என்பதையும் எடுத்துரைத்தேன்.
மேலும், 2017ஆம் ஆண்டு இந்தக் கோயில் விஞ்ஞான ரீதியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதற்காக யுனெஸ்கோவின் விருது பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினேன். இந்த விருது, கோயிலின் பாரம்பரிய முக்கியத்துவத்தையும், அதை பாதுகாக்கும் முயற்சிகளையும் உலகளவில் அங்கீகரிக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றும், இந்த அங்கீகாரம், ஸ்ரீரங்கம் கோயிலை முழுமையான உலக பாரம்பரிய தலமாக உயர்த்துவதற்கு வலுவான அடித்தளத்தை அளிப்பதாகவும் தெரிவித்தேன்.
ஸ்ரீரங்கம் கோயில், அதன் ஒப்பற்ற கட்டிடக்கலை பிரம்மாண்டத்திற்கும், ஆழமான ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும் எடுத்துக்காட்டாக உலகிலேயே மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள இந்து கோயில் வளாகமாகத் திகழ்வதை சுட்டிக்காட்டி,
2014ஆம் ஆண்டு தற்காலிக பட்டியலில் இடம்பெற்ற இந்தக் கோயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பதற்கு முறையாகப் பரிந்துரை செய்யவும், அதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பாரம்பரிய நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அமைச்சரை வேண்டிக்கொண்டேன்.
திருச்சி மக்களும், நாடு முழுவதும் உள்ள பக்தர்களும் இந்தக் கலாச்சாரப் பொக்கிஷத்தை ஆழமாக மதிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பது, அதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினர் இந்த கோயிலை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையையும், இதன் அவசியத்தையும் புரிந்துகொண்ட அமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் அமைச்சகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.