கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரைத் தரிசிக்க, அடர்ந்த வனப்பகுதி மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் வழியாகப் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். வழக்கமாகக் கடும் குளிர் காரணமாகக் குளிர்காலங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதியான நாளை முதலே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாகச் செல்லும் இந்த பயணத்தின் போது காடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லத் தடை உள்ளிட்ட பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.

