Skip to content

“பிரதமர் மோடி ஒரு ‘டூரிஸ்ட் பி.எம்'”: தஞ்சை மாநாட்டில் கனிமொழி எம்.பி. கடும் தாக்கு

தஞ்சாவூர் மண்ணில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பிரம்மாண்ட மாநாட்டில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாகச் சாடிப் பேசினார். அவரது உரையின் விரிவான தொகுப்பு பின்வருமாறு:

தேர்தல் கால சுற்றுலா பிரதமர்: “பிரதமர் மோடி பொதுவாக வெளிநாடுகளில்தான் பயணம் செய்து கொண்டிருப்பார். தேர்தல் காலம் வரும்போது மட்டும் அவருடைய விமானம் இந்தியாவிற்குத் திரும்பும். எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ, அந்த மாநிலத்திலே வந்து இறங்குவார். அதனால் நம்முடைய பிரதமர் தேர்தல் சீசனுக்கான ஒரு ‘டூரிஸ்ட் பிரைம் மினிஸ்டர்’ (சுற்றுலா பிரதமர்) தான்” என்று கனிமொழி கிண்டலாகக் குறிப்பிட்டார்.

ரிப்பேர் மாடல் இன்ஜின்: மத்திய அரசு முன்வைக்கும் ‘டபுள் இன்ஜின்’ முழக்கத்தை விமர்சித்த அவர், “தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் டபுள் இன்ஜின் என்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை அந்த இன்ஜின் என்னைக்குமே வேலை செய்யாத, ஒரு ‘ரிப்பேர் மாடல்’ இன்ஜினாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் தான் தொழில் வளர்ச்சி அதிகம். 38,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், அதில் பணிபுரிபவர்களில் 42 சதவீதம் பேர் பெண்கள். மின்னணு மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தச் சாதனையை எந்த டபுள் இன்ஜினும் செய்யவில்லை” என்றார்.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: “2012-ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 56 ரூபாயாக இருந்தது. அப்போது, ‘திறமையானவர்களிடம் ஆட்சி இல்லை, அதனால்தான் ரூபாயின் மதிப்பு வீழ்கிறது’ என்று விமர்சித்தார். ஆனால் இன்று ஒரு டாலரின் மதிப்பு 92 ரூபாய் ஆக உள்ளது. அப்படியென்றால் உங்கள் ஆட்சி இன்னும் மோசமாக இருக்கிறதா இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மகளிர் திட்டங்களும் பொய் வாக்குறுதிகளும்: எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், “யார் வேண்டுமானாலும் 10,000 தருகிறேன், 8,000 தருகிறேன் என்று பெயரை மாற்றி ‘குலவிளக்குத் திட்டம்’ எனச் சொல்லலாம். ஏற்கனவே ஸ்கூட்டி தருவதாகச் சொன்னார்கள், அது வந்ததா? இல்லை. ஆனால், நம் முதல்வர் வழங்கிய ‘மகளிர் உரிமைத் தொகை’ ஒவ்வொரு மாதமும் உங்கள் கதவைத் தட்டுகிறது. விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் எனப் பெண்களுக்காகச் சிந்திக்கும் ஒரே முதல்வர் நம் முதல்வர் மட்டும்தான்” என்றார்.

ஆளுநர் மாளிகை செலவு: ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்த கனிமொழி, “ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில் அரசின் பாலிசி நோட்டை படிக்க மறுத்து ஆளுநர் அவமதிக்கிறார். இந்த ஆளுநரே நமக்கு வேண்டாம். நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களுக்காக ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதை மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.

பிரதமருக்கு அடுக்கடுக்கான கேள்விகள்: தமிழ்நாட்டிற்கு வரவுள்ள பிரதமருக்கு கனிமொழி எம்.பி. சில கேள்விகளை முன்வைத்தார்:

  • தமிழகக் குழந்தைகளுக்குத் தர வேண்டிய 2,500 கோடி நிதியை எப்போது தருவீர்கள்?
  • ஓசூர் விமான நிலையத்தை எப்போது தருவீர்கள்?
  • வெள்ள நிவாரண நிதியை எப்போது விடுவிப்பீர்கள்?
  • தொகுதி மறுவரையறை (Delimitation) செய்யப்பட்டால் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையுமா, குறையாதா? என்பதற்குப் பதிலோடு வாருங்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்: “அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை ஆளாக்கிய இயக்கத்திற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்கிறார். மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று விமர்சித்தார்.

இறுதியாக, “தமிழகப் பெண்கள் புத்திசாலிகள். யாருக்குக் கைதட்ட வேண்டும், யாரை விலக்கி வைக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வரும் தேர்தலில் திமுகவின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லி, ஒரு போர் பீரங்கியாகச் செயல்பட வேண்டும்” என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

error: Content is protected !!