திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில் பயணித்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருத்தணி ரயில் நிலையத்தில் சிராஜை இறக்கி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள், அவரை பட்டாகத்தி மற்றும் கட்டையால் தாக்கினர். இந்தத் தாக்குதலை வீடியோவாகவும் பதிவு செய்தனர். கொடூரமான இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
இது குறித்து பேசிய அவர் “சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் புலம்பெயர் தொழிலாளி அல்ல, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தவர்” என்று தெரிவித்தார்.கைதான நால்வரில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒருவரை சிறார் நீதிக்குழு அறிவுறுத்தலின்படி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக ஐ.ஜி. கூறினார்.
மேலும், சிறார்களிடம் இருந்து 2 பட்டாகத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.“வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறு. தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டதாக பரவும் தகவல் தவறானது. அவர் பத்திரமாக உள்ளார்” என்று ஐ.ஜி. அஸ்ரா கர்க் தெளிவுபடுத்தினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

