Skip to content

டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை… உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கோமு (58). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். பின்னர் கோமு தனது வீட்டுக்கு சென்று விவசாயம் செய்து வந்தார். அவருக்கும், அவருடைய மனைவி தங்கத்தாய்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் தங்கத்தாய் கணவரை விட்டு பிரிந்து மகன் மாடசாமி வீட்டுக்கு சென்றார்.

இதற்கு தங்கத்தாயின் சகோதரரான விவசாயி முருகன்(56) தான் காரணம் என்று கருதிய கோமு, அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று முன்தினம் இரவில் முருகனும், அவருடைய தங்கை மாரியம்மாள் கணவரான விவசாயி மந்திரம்(55) என்பவரும் கயத்தாறு அருகே தளவாய்புரம் டாஸ்மாக் கடை பாருக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கோமு அரிவாளால் மைத்துனர் முருகனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற மந்திரத்தையும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மந்திரத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரட்டைக்கொலை குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கோமுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலையான முருகனுக்கு வெள்ளத்துரைச்சி என்ற மனைவியும், ராமமூர்த்தி என்ற மகனும் உள்ளனர். ராமமூர்த்தி, கோவையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோவையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். கொலையான மந்திரத்துக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், மல்லிகா, காப்புதுரைச்சி ஆகிய 2 மகள்களும், மகேஷ் என்ற மகனும் உள்ளனர். கோமுவின் மனைவி தங்கத்தாயும், மாரியம்மாளும் அக்காள்-தங்கை. இவர்களுடைய சகோதரர் முருகன் ஆவார்.

டாஸ்மாக் கடை பாருக்குள் அரிவாளுடன் புகுந்த கோமு தனது மைத்துனர் முருகனையும், மனைவியின் தங்கை கணவர் மந்திரத்தையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. காண்போரை பதறச் செய்யும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!