தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி (35). இவர் நேற்று மதியம் மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு உறவினர் சகாயசாமியுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். உடன்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்து மொபட்டுடன் சேர்த்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதில் மொபட்டுடன் நிலைகுலைந்து கீழேவிழுந்து காயமடைந்த தமிழரசி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். தமிழரசியும் உறவின பெண்ணும் அவர்களுடன் போராடினர். ஆனால் அந்த 2பேரும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் துணையுடன் தமிழரசி உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகை வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் போலீசார் தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

