ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் மோகன்குமார். இவர் கடந்த 08.02.2026 அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காஞ்சிக்கோயில் 4 ரோடு பகுதியில் உள்ள ‘சஷ்டி பாஸ்ட் புட்’ உணவகம் இரவு 10 மணிக்கு மேலாகியும் இயங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர் மோகன்குமார், கடையை ஏன் இன்னும் மூடவில்லை எனக் கேட்டு அங்கிருந்த ஊழியர் ராம்துலால் மோண்டல் என்பவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரைத் தாக்கியுள்ளார். இந்த அராஜகச் செயல் உணவகத்தில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவானது.
இந்த வீடியோ பதிவைக் கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இது வேகமாகப் பரவி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழியரைத் தாக்கிய தலைமைக் காவலர் மோகன்குமாரைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை ஈரோடு மாவட்ட காவல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

