சென்னை பழைய மாமல்லபுரம் சாலை காரப்பாக்கத்தில் பள்ளிக்கரணை போக்குவரத்து உதவியாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் போலீஸ், வக்கீல், பிரஸ் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டியிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சம்பந்தப்பட்ட துறைகளில் இல்லாத நபர்கள் பலர் இவ்வாறு தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம், தங்கள் உறவினர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பதாகவும், அதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறினர்.
இதனை ஏற்க மறுத்த போலீசார் அவர்களின் வாகனங்களில் இருந்த ஸ்டிக்கர்களை அதிரடியாக அகற்றினர். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் காவல்துறையின் சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளில் பணி செய்பவர்கள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறி வாகன ஓட்டிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

