நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்த நசீர் அகமது (26), கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், குரூஸ் என்பவர் கஞ்சா விற்றதற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் நசீர் அகமதுவுக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த நசீர் அகமது தலைமறைவான நிலையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நசீர் அகமதுவிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்ற வியாபாரியிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து நீலகிரியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவிற்குச் சென்ற தனிப்படை போலீசார், மோகனசுந்தரத்தைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 17.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் போலீஸ்காரர் நசீர் அகமது உட்பட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் நசீர் அகமதுவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

