Skip to content

மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா பகுதியில், தல்மோத் சோதனைச் சாவடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்தே போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கௌரவம் செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மற்ற அதிகாரிகளுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரிக்கு, திடீரென கடுமையான மயக்கம் ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த சக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனையில், அவருக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு (Heart Attack) மற்றும் நெஞ்சு வலியே மரணத்திற்கு முக்கிய காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

நாட்டிற்காகத் தனது கடைசி மூச்சு வரை கடமையாற்றிய மோகன் ஜாதவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!