ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் பெண்ணின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.
அங்கிருந்தவர்கள் தாங்களாகவே பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர். அப்போது அங்கிருந்த கோபால் என்ற காவலர், கட்டிலில் கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கினார். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கிய கோபால், உள்ளே சிக்கியிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். காவலர் கோபாலின் துணிச்சலான செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

