தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி பகுதியில் 1915 ம் ஆண்டு அக்டோபர் 15.ம் அன்று ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ரயில் நிலையம் துவங்கப்பட்டு பொதுமக்களின் சேவையை தொடங்கியது.
அப்போது குறுகிய இருப்பு பாதையாக இருந்த நிலையில் கோவை -போத்தனூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை சேவை தொடங்கப்பட்டது. பின்பு 1928.ம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி முதல் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் அதன்பிறகு 1932.ம் ஆண்டு பொள்ளாச்சியிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கும்
என அடுத்தடுத்து ரயில் சேவை தொடங்கியது. இதனால் பொள்ளாச்சி வழித்தடத்தில் இருந்து ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டு இருந்தது.
இதனால் பொள்ளாச்சியிலிருந்து பிற மாவட்ட பகுதிகளுக்கு ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து 2015.ம் ஆண்டு ஜூலை 15 முதல் குறுகிய பாதையில் இருந்து அகல ரயில்பாதை மாற்றபட்டு சேவை துவங்கப்பட்ட நிலையில்
பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு மற்றும் கோவை, மதுரை, திருச்செந்தூர், சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயிலாக வாரத்தில் இருநாட்கள் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயில் சேவை தொடர்ந்துள்ளது.
இந்த அகல ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் பணியும் தற்போது முழுமையடைந்துள்ளதால் தற்போது பொள்ளாச்சி வழியாக 7 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.