Skip to content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஏமாற்றியும், கடத்தியும்   பண்ணை வீடுகளுக்கு  கொண்டு   வந்து  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங் கட்சி  நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.இதனால் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவே அஞ்சினார்கள்.

பாதிக்கப்பட்ட  இளம்பெண்கள் கதறும் ஆடியோ  வீடியோ 2019 பிப்ரவரியில்  சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது.  அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அரசு  இந்த வழக்கை கண்டு கொள்ளாததால் அனைத்து கட்சியினரும் பெரும் போராட்டம் நடத்தினர்.

கனிமொழி எம்.பி. தலைமையிலான  திமுக மகளிர் அணி,  கம்யூனிஸ்ட் பெண்கள் இயக்கங்கள் மறியல், ஆர்ப்பாட்டம் என மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு  பொள்ளாச்சி  டவுன் போலீசிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சி.பி.ஐ. வசம்  ஒப்படைக்கப்பட்டது.  இந்த வழக்கை மூடி மறைக்க  நடந்த அத்தனை முயற்சிகளும் திமுக மற்றும் மகளிர் போராட்டத்தால் உடைத்தெறியப்பட்டது.

இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன் ( 30), திருநாவுக்கரசு (30),வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30),  ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம் (38), , அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவை  மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த வசதி படைத்த இளைஞர்கள்.  இவர்கள் மீது கூட்டுசதி,  பாலியல் வன்கொடுமை  உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 48 சாட்சிகள் நேரடியாக சாட்சியம் அளித்தனர்.

கல்லூரி மாணவி,   அழகான இளம்பெண்களை குறிவைத்து முதலில் காதல் வலை  வீசி  தனியான ஒரு பங்களாவுக்கு அழைத்து வந்து  பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து  மிரட்டி தொடர் பலாத்காரம் செய்தனர். அப்போது ஒரு பெண் அடிக்காதீர்கள் அண்ணா என அலறும் வீடியோ தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியது.  பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின்  அண்ணன் போலீசில் புகார் செய்தார். அவரை அதிமுகவினர் தாக்கினர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட் நேரடி கண்காணிப்பில்,  கோவை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில்  யாரும் பிறழ்  சாட்சியாக மாறவில்லை. அதற்கான முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டபோதிலும் யாரும் பிறழவில்லை.  பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய விவரம் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் மூடப்பட்ட அறையில் ரகசியமாக நடத்தப்பட்டது.

திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐபோன், லேப்டாப்புகள் முக்கிய ஆதாரமாக கிடைத்தது.  இதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது. அதில் உயர்பதவிகள், அந்தஸ்தில் உள்ள பல பெண்களின் ஆபாச படங்களும் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.  கோவை மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்களை இவர்கள் தங்கள் வலையில் வீழ்த்தி இருந்தனர் என்பது லேப்டாப்  ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்த நிலையில்  இந்த வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி ( இன்று) அறிவிக்கப்படும் என கடந்த 28-ந் தேதி நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து  துப்பாக்கி போலீஸ் காவலுடன் இன்று காலை 9.15 மணிக்கு   கோவை மகிளா கோர்ட்டுக்கு  வேனில் கொண்டு வரப்பட்டனர். 9பேரும் முகத்தை கைக்குட்டையால் மறைத்து கட்டி இருந்தனர்.  அவர்கள் பெரிய அளவில் கவலை தோய்ந்தவர்களாக காணப்படவில்லை.  வழக்கம் போல   கோாட்டுக்குள் நடந்து சென்றனர்.

9பேருக்கும் இதுவரை  ஜாமீன் வழங்கப்படவில்லை. எனவே அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கோர்ட்டில் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு  இருந்தது. மோப்பநாய் மூலம்  கோர்ட் வளாகத்தில் சோதனையும் போடப்பட்டது. துணை ஆணையர் தலைமையில்  பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சரியாக 10 மணிக்கு நீதிபதி நந்தினி தேவி மற்றும் வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் அனைவரும் கோர்ட்டுக்கு வந்தனர். மூடப்பட்ட அறையில் தான் தீர்ப்பு  வழங்கப்பட்டது.   தீர்ப்பு அளிக்கப்பட்ட  கோர்ட்டு அறைக்கு  பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.  குற்றம் சாட்டப்பட்டவர்கள், இருதரப்பு வழக்கறிஞர்கள்,  வழக்கை விசாரித்த  சிபிஐ அதிகாரிகள் மட்டும்  உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

10.30 மணிக்கு பூட்டிய அறையில் தீர்ப்பினை நீதிபதி நந்தினிதேவி வாசிக்கத்தொடங்கினார். 9 பேரும்  குற்றவாளிகள் என்றும், 12 மணிக்கு தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

இதுபற்றி  சிபிஐ வழக்கறிஞர்  சுரேந்தர் கூறும்போது,  கேங் ரேப் நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே அதிகபட்சமாக சாகும்வரை ஆயுள் தண்டனை  கிடைக்கலாம். குறைந்தபட்சமே 20 வருட தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்  குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் கேட்டு உள்ளோம்.  எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என நம்புகிறோம் என்றார்.சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப் , செல்போன் மூலம்  அழிக்கப்பட்ட  வீடியோக்கள் மீட்டெடுக்கப்பட்டு ஆதாரமாக சேர்க்கப்பட்டது.

பகல் 12.30 மணி அளவில்  நீதிபதி  நந்தினி  தண்டனை விவரத்தை அறிவித்தார். 9 பேர் மீதும் தனித்தனியாக 13 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால்  தீர்ப்புகள் தனித்தனியாக  வாசிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி  உத்தரவிட்டார்.  அத்துடன் பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு  மொத்தமாக ரூ.85  லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.   குற்றவாளிகளுக்கு   மொத்தம் 1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த அபராதம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.  இந்த வழக்கில் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சிபிஐ வழக்கறிஞர்  சுரேந்தர் கூறினார்.  தங்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

முதல் குற்றவாளி சபரி ராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, 2ம்  குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.  3ம் குற்றவாளி சதீசுக்கு 3 ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மொத்தத்தில்  9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 30 நாளுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.  இந்த தண்டனை நிலை நிறுத்தப்படும் என நம்புவதாகவும்  வழக்கறிஞர் கூறினார்.  தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் குற்றவாளிகள் அனைவரும் சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது  குற்றவாளிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

குற்றவாளிகள் மீதான 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கூட்டு பாலியன் வன்கொடுமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக்கு பல்வேறு தரப்பினரும்  ஆதரவும் வரவேற்பும் தெரிவித்து உள்ளனர். தீர்ப்பு அளிக்கப்பட் ட நீதிமன்றத்தில் திரண்ட பெண்கள் தீர்ப்பை கேட்டதும்  இனிப்பு வழங்கி  தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தங்களின் வயதை கருத்தில் கொண்டும்,  பெற்றோருக்கு ஒரே மகன் என்றும்,  வயதான பெற்றோர் உள்ளனர் என்றும் கூறி  அதனை கருத்தில் கொண்டு   தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர்  பாண்டியராஜன் கூறினார்.

இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய அப்போதைய கோவை மாவட்ட எஸ்.பியான பாண்டியராஜன் என்பவர் முயற்சி செய்தார் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளிட்டு இந்த வழக்கை  சிதறடிக்கப்பார்த்தார் என்று அப்போது அவர் மீது பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டினர். பின்னர் பாண்டியராஜன்  அங்கிருந்து மாற்றப்பட்டார். அதன் பிறகே வழக்கு சரியான திசையில் சென்றது. பாண்டியராஜன் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

error: Content is protected !!