திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கத்துடன் சேர்த்து வழங்கும் பணியை சென்னை ஆலந்தூரில் இன்று (08-01-2026) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1302 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை,
முழு கரும்பு ஒன்று, ரூ. ஆயிரம் ரொக்கம், விலையில்லா வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் வழங்கும் பணி தொடங்கியது.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை திருச்சி பெரிய மிளகுபாறை,உறையூர், எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலெக்டர் சரவணன்,மேயர் அன்பழகன்,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,மாநகராட்சி ஆணையர் மதுபாலன்,பகுதிச் செயலாளர் மோகன்தாஸ்,கவுன்சிலர் புஷ்பராஜ் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலியார்சத்திரம், காஜா பேட்டை, ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 3000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு அடங்கிய பை மற்றும் ஒரு முழு நீள கரும்பினை பொதுமக்களுக்குவழங்கினார்
. இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பகுதி கழகச் செயலாளர்கள் ஏ.எம்.ஜி.விஜயகுமார், ராஜ்முஹம்மத் மாமன்ற உறுப்பினர் லீலாவேலு, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளவன், தாசில்தார்கள் விக்னேஷ், தனலட்சுமி, தாசில்தார் விக்னேஷ்
மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்காக டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த திங்கள்கிழமை தொடங்கி அனைவருக்கும் 2 நாளில் வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 300 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள து முற்பகல் 150 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகல் 150 குடும்ப அட்டைகளுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். 0431-2411474, 94450-45618 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1967, 1800-425-5901 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், திருவரங்கம், தொட்டியம், திருவெறும்பூர், மருங்காபுரி என 11 வட்டங்களிலும் அந்தந்த கடை வாரியாக டோக்கன் வழங்கப்பட்ட நாளில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப் பணியில், நியாயவிலைக் கடை பணியாளர்கள் 950 பேர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 8,35,844 அரிசி குடும்ப அட்டைகள், 980 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 824 குடும்பங்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
தேசிய கூட்டுறவு இணையத்தின் மூலம் பச்சரிசியும், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் மூலம் சர்க்கரையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 8.36 லட்சம் கரும்புகளுக்காக ரூ.3.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்புக்கான தொகை, வெட்டுக் கூலி, ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, போக்குவரத்து செலவு உள்பட அனைத்துக்கும் சேர்த்து இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, ரொக்கமாக ரூ.251.05 கோடி வழங்கப்படுகிறது.
டோக்கன் பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த நபர்களில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள யாரேனும் ஒருவர், தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதி, நேரம் ஆகியவற்றை பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் ஒரே நேரத்தில் சென்று கூட்ட நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று தொடங்கி பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நியாய விலைக் கடை பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், கிராமப்புற பகுதிகளில் ஜன.8ஆம் தேதி தொடங்கி 4 நாள்களுக்குள் கொடுத்து முடித்துவிடுவோம். நகரப் பகுதியில்தான் குடும்ப உறுப்பினர்கள் தங்களது வேலை நேரத்துக்கு ஏற்ப வருவதால் 5 நாள்கள் ஆகக் கூடும். இருப்பினும், ஜன.13ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களு்ககும் பரிசுத் தொகுப்புகளை வழங்கிட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனர்.

