Skip to content

ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

மேற்கு வங்கம் மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் பிஸ்வாஸ் என்பவர் ‘ஃபிட் பிஸ்வஜித்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிரபல யூடியூபரான இவர், இந்திய ராணுவம் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துகளையும், பொய்யான தகவல்களையும் பரப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. தனது ஃபேஸ்புக் நேரலைகளில் ராணுவ வீரர்களை இழிவுபடுத்தி பேசி வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டையின்றி கேமரா முன் பேசிய அவர், ‘ராணுவ வீரர்கள் சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்கிறார்கள், நாட்டின் மீது உண்மையான அன்பு இருந்தால் அவர்களுக்குச் சம்பளம் தேவையில்லை’ என்று கொச்சைப்படுத்தியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் கண்டனத்தைப் பெற்றது. இதையடுத்து, அவரது பதிவுகளால் அதிருப்தியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பின்தொடர்பாளர்கள் அளித்த புகார்களின் பேரில், மேற்குவங்க காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிஸ்வஜித் பிஸ்வாஸை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், நாடியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனது செயலுக்காக அவர் ‘மனப்பூர்வமாக மன்னிப்புக்’ கோரினார். இந்தியாவில் ராணுவத்திற்கு அளிக்கப்படும் மரியாதையைச் சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த மே மாதம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட ஷர்மிஸ்தா பனோலி என்ற யூடியூபர் ஒருவர் குருகிராமில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!