தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற புரட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார்.
இந்நிலையில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி சென்று கொண்டிருக்கிறது” என கேட்கப்பட்டது. அப்போது, அவர், அனைத்துக் கட்சிகளும் தங்களுடன் தோழமையாக உள்ளதால் இப்போது எதையும் கூட்டணி எனக் கூற முடியாது என்று குறிப்பிட்ட அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு செயல்படுவதாகத் தெரிவித்தார். கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனக் கூறியுள்ள நிலையில், யாருடன் கூட்டணி மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கெல்லாம் கூட்டணி தொடர்பாக யாரோ ஒருவர் சொன்னதை நம்பி நான் பதில் கூற மாட்டேன். இன்றைக்கும் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சி தான்.அனைத்து கட்சிகளுடன் நாங்கள் நட்புடனே பழகி வருகிறோம். கூட்டணி குறித்து ஜனவரி 9-ந்தேதி தே.மு.தி.க. முடிவு செய்யும் என்றார்.

