தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில்
பழைய ஓய்வூதிய திட்டம் ,இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று முதல் மூன்று நாள் தொடர் மறியல் போராட்டம் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், அந்தோணி, எட்வட்ராஜ், கல்யாணி ,சந்திரசேகர் ,பொன்னுசாமி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் திரளான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதி படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனே வழங்க வேண்டும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
