நாடு முழுவதும் 61,000 பேருக்கு ஒன்றிய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘ரோஸ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா திட்டம் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, தகுதியான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 18வது ரோஸ்கர் மேளா இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட 61,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நியமனங்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை ராணுவப் படைகள் (சுமார் 49,200 பேர்), சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘இந்த பணி நியமனக் கடிதங்கள், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இளைஞர்களின் உறுதிமொழி ஆவணமாகும். வரவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில், மத்திய ரிசர்வ் காவல் படையின் அனைத்து ஆண் குழுக்களையும் பெண் உதவி கமாண்டண்ட்கள் வழிநடத்துவார்கள் என்பது பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதற்கு சிறந்த உதாரணமாகும்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

