Skip to content

அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த திடீர் துயரம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர், அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வருத்தம் வெளிப்படுத்தினார்.

அரசியல் எல்லைகளைத் தாண்டி அஜித் பவார் மக்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.அஜித் பவார் ஒரு உண்மையான மக்கள் தலைவராகவும், மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக எப்போதும் முன்னணியில் நின்ற கடின உழைப்பாளியாகவும் திகழ்ந்தவர் என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

மாநில வளர்ச்சி, நிர்வாகம், மக்கள் நலத்திட்டங்கள் ஆகிய துறைகளில் அவரது அர்ப்பணிப்பு மறக்க முடியாதது என்று குறிப்பிட்ட பிரதமர், அஜித் பவாரின் பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்று உறுதியளித்தார்.விபத்தில் அஜித் பவாருடன் உயிரிழந்த மற்றவர்களுக்கும் பிரதமர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். இந்த திடீர் இழப்பு அரசியல் வட்டாரத்தையும் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அஜித் பவாரின் பணிகள் மகாராஷ்டிராவின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து உத்வேகமாக அமையும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிரதமர், இக்கடினமான நேரத்தில் அவர்களுக்கு தெய்வீக வலிமை கிடைக்கப் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். அஜித் பவார் மகாராஷ்டிரா அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் நீண்ட காலம் பேசப்படும் என்று அவரது இரங்கல் செய்தி உணர்த்துகிறது.

error: Content is protected !!