Skip to content

அசாம் பாஜ., அரசுக்கு எதிராக பிரியங்கா காந்தி குற்றப்பத்திரிக்கை வௌியீடு

அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலான அக்கட்சியின் ஆய்வுக்குழு 2 நாள் பயணமாக கவுகாத்தி சென்றுள்ளது. இந்நிலையில் கவுகாத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அசாம் பாஜ அரசுக்கு எதிராக 20 அம்ச குற்றப்பத்திரிகையை பிரியங்கா காந்தி வெளியிட்டார். ‘அசாம் மக்கள் vs ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பாஜ அரசு (2021-2026)’ என 12 பக்க குற்றப்பத்திரிகைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது நெருங்கிய அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஊழலில் திளைப்பதாகவும், சட்டவிரோத சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற நிதி மேலாண்மையால், பெரிய கடன்களை வாங்கி மாநிலத்தை கடன் பொறியில் தள்ளியதாகவும் கூறப்பட்டுள்ளது. பாஜ அரசின் புல்டோசர் நீதி சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 20 குற்றச்சாட்டுகளும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்து குறைகளை கேட்ட போது அவர்களே நேரடியாக கூறியவை என காங்கிரஸ் கூறி உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை வீடு வீடாக கொண்டு சேர்த்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநில பாஜ மூத்த செய்தி தொடர்பாளர் ரூபம் கோஸ்வாமி, ‘‘இந்த குற்றப்பத்திரிகை அப்பட்டமான பொய்கள் நிரம்பியது. முற்றிலும் ஆதாரமற்றது’’ என பதிலளித்துள்ளார்.

  • தேர்தலுக்கு முன்பு சில தலைவர்கள் கட்சி மாறுவது வழக்கம்தான்.

அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபன்போரா கட்சி மாறி பா.ஜவில் பிப்.22ல் இணைவது தொடர்பாக பிரியங்கா கூறுகையில்,’ தேர்தல்களின் போது, ​​சில தலைவர்கள் கட்சி மாறுவது வழக்கம் தான். இருப்பினும் நாங்கள் ஒற்றுமையாகவும் வலுவாகவும் போட்டியிடுவோம். இந்தத் தேர்தலை ஒரு போராகக் கருதுகிறோம். எங்களிடம் பல வீரர்கள் உள்ளனர், நாங்கள் வெற்றி பெறுவோம்’ என்றார்.

error: Content is protected !!