பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா காந்தி – ராபர்ட் வதேரா தம்பதியின் 25 வயது மகனுமான ரையான் வதேரா , புகைப்படக் கலைஞராகவும் விஷுவல் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். இவர் தனது தாத்தா ராஜீவ் காந்தி மற்றும் மாமா ராகுல் காந்தி பயின்ற டேராடூன் டூன் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பையும் முடித்துள்ளார்.
இவரும் டெல்லியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான அவிவா பெய்க்கும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவிவா பெய்க் ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்தவர் என்பதோடு, தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாகவும் திகழ்கிறார். இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் ரையான் வதேரா மற்றும் அவிவா பெய்க் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ரையான் வதேரா வனவிலங்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதோடு, ‘டார்க் பெர்செப்ஷன்’ உள்ளிட்ட பல்வேறு புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
அதேபோல் அவிவா பெய்க் ‘அட்லியர் 11’ என்ற ஸ்டுடியோவை நிர்வகித்து வருகிறார். இருவரும் இணைந்து கலைத்துறையில் பயணித்து வரும் சூழலில், இந்தத் திருமணம் குறித்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‘நீண்ட கால நட்பு தற்போது உறவாக மலர்ந்துள்ளது, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்’ என்று தெரிவித்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சோனியா காந்தி குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

