நாளை மறுநாள் திருச்சியில் டி-மார்ட் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் – கரூரில் விக்கிரமராஜா பேட்டி.
கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய விக்ரமராஜா, நாளை மறுநாள் திருச்சியில் டி-மார்ட் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் முன்புறம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும், இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வணிகர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும், இது முதல்கட்டமான போராட்டமாக இருக்கும் என்றும், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார். டி-மார்ட் 17 இடங்களில் செயல்பட்டு வருவதாகவும், மேலும், 37 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 100 கிளைகளை திறக்க அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், கரூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டதற்கும், சுற்று வட்டச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நன்றி தெரிவித்தார்.