Skip to content

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கக்கோரி … தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

கட்டுமான துறைக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலைகளை கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமானத் தொழில் நாட்டில் வளர்ச்சியின் குறியீடாகவும், பண்பாடு,கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடாகவும் இருந்து வருகிறது. கட்டுமான தொழிலை நம்பி கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போது கட்டுமான தொழிலுக்கு அடிப்படை தேவையான ஜல்லி,கம்பி, சிமெண்ட், எம் சாண்ட் மணல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கட்டுமான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களின் கனவு சொந்த வீடுதான். ஆனால் தற்போது கட்டுமான கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தங்களின் வீடுகளின் கட்டுமானப்பணிகளை பலரும் நிறுத்தி உள்ளனர். இதனால் வேலை கிடைக்காமல் கட்டுமானத் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் மற்றும் கட்டுநர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் விலை உயர்ந்துள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்டுமான பொறியாளர்கள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான பொறியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் முரளி குமார், முன்னாள் செய்தி தொடர்பாளர் வைத்தியநாதன், முன்னாள் மாநிலத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொருட்களின் அடிப்படை தேவைகளான ஜல்லி, எம்சாண்ட், பிசாண்ட், கம்பி ,சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும், எதிர்காலத்தில் கட்டுமான தொழில் சிறந்து விளங்கிட தமிழ்நாடு அரசு கட்டுமான துறைக்கு என்று தனிஅமைச்சகம் ஏற்படுத்த வேண்டும், கட்டுமான விலை உயர்வு ஏற்படுகின்ற நிலையில் இவைகளை கண்காணித்து, ஒழுங்குப்படுத்திட கட்டுமான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

காவிரி டெல்டாவில் காவிரி உட்பட பல்வேறு ஆறுகளில் உள்ள மணல் மேடான பகுதிகளை சீரமைத்திடும் வகையிலும்,அந்தந்த பகுதியில் கட்டுமான தொழிலுக்கு மணலை பயன்படுத்திடவும் யூனிட் கணக்கிட்டு மணல் அள்ளவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொறியாளர்கள் சங்க மண்டல தலைவர் ஏ.எஸ்.அறிவழகன், தஞ்சை மைய தலைவர் சி.மாரிமுத்து, முன்னாள் தலைவர் ஜோ.ஜான் கென்னடி ,செயலாளர் ஏ.சார்லஸ்,பொருளாளர் இறை.கார்குழலி, மூவேந்தர் தொழிற்சங்க அமைப்பின் நிர்வாகிகள் சீர்.தங்கராஜ், கோவிந்தராஜ், கருப்பையா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!