லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் லடாக் யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டபோது, சட்டமன்றமற்ற நிர்வாகமாக மாறியது.
இதனால், உள்ளூர் மக்கள் தங்கள் அடையாளம், வேலைவாய்ப்பு மற்றும் உரிமைகளை இழப்பதாக உணர்ந்து, மாநில அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம், லே-யில் நடந்த மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது. மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதம் மற்றும் முழு அடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கற்கள் வீசப்பட்டன. கோபமடைந்த இளைஞர்கள் பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்தனர், மேலும் காவல் வாகனங்களும் எரிக்கப்பட்டன. காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லே அபெக்ஸ் பாடி (LAB) மற்றும் கார்கில் ஜனநாயக் கூட்டணி (KDA) ஆகியவை இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், அவை பலனளிக்கவில்லை. அக்டோபர் 6ம் தேதி மேலும் ஒரு பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டுள்ளது.
தற்பொழுது, மோதல்கள் மற்றும் தீ வைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து அதிகாரிகள் லேவில் ஊரடங்கு உத்தரவை விதித்தனர். வன்முறை காரணமாக, காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், மாநில அந்தஸ்து கோரியும், ஆறாவது அட்டவணையை லடாக்கிற்கு நீட்டிக்கவும் கோரி இரண்டு வார உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.