தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிருபர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அண்ணாமலை டிவிட்டரில் இடம்பெற்றிருந்தது. இந்த ஆடியோ ‘போலியானது’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த ஆடியோ குறித்து அறிவியல் பூர்வமான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார். மேலும் “சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் எதிர்வினையாற்றவில்லை. எனக்கு அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காவில் கவனம் செலுத்தும் வகையில் நான் ஈடுபட்டு வருகிறேன். மார்ச் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய பொது வாழ்வில் நான் செய்த அனைத்தும் எனது தலைவரும், மாண்புமிகு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினால் தான். எங்களை பிரிப்பதற்கான எந்தவொரு நாச வேலையும் வெற்றி பெறாது. அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அது போலி என்பதற்கான தொழில்நுட்ப ரீதியான ஆதாரமும் உள்ளது” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
