வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திற்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
சுமார் 16 கடல் மைல் தொலைவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 4 மீனவர்களையும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். வானிலை எச்சரிக்கையை மீறிச் சென்றதால் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

