திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.
பிரமோத்சவத்தையொட்டி, விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள் எம்பெருமான் வாகன சேவையை பார்க்கும் வகையில் 36 இடங்களில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9 நாட்கள் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும். சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் ‘லவுகீக’ முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக, தினசரி ஏழுமலையான் பல லட்சம் டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு காண்போரை பிரமிக்க வைக்கும் வகையில் அருள்பாலிப்பார். மேலும், பிரம்மோற்சவ நாட்களில் தினந்தோறும் வீதிவலம் வரும் மலையப்பசுவாமி ஒவ்வொரு வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்த பிரமோற்சவ நாட்களில் தினசரி பல லட்சம் பேர் ஏழுமலையானை தரிசித்து ஆசி பெற்று செல்வர்.
மாட வீதிகளின் ஏழுமலையான் எழுந்தருளும் வாகன சேவையை காண காத்திருக்கும் 35 ஆயிரம் பக்தர்கள் 45 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு அனைவரும் வாகன சேவையை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
தினமும் 60 டன் பூக்களை கொண்டு சாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும். 29 மாநிலங்களை சேர்ந்த 229 கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இதையும் படியுங்கள்: திருப்பதி பிரம்மோற்சவ விழா – 9 நாட்கள் நடைபெறும் சேவைகள் 3500 தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து மலைக்கு செல்ல 4 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை கண்காணிக்க 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள், 4,700 போலீசார் மற்றும் 450 மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தினமும் 8 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
பிரம்மோற்சவ விழா நேரத்தில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பிரேக் தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் திருப்பதியில் கொண்டு விடப்படுவார்கள்.
திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன. கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரமோற்சவ முதல்நாள்:
மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
பிரமோற்சவ 2-வது நாள்:
காலை- சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.
பிரமோற்சவ 3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்மவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார். இதையும் படியுங்கள்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால்
பிரமோற்சவ 4வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார். மோகினி அவதாரம்-கருட சேவை
பிரமோற்சவ 5வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருடசேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாடவீதிகளில் வீதிஉலா வருவார்.
பிரமோற்சவ 6வது நாள்: காலை- ‘சிறிய திருவடி’ என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்ககிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமப்பிரானாக வலம் வருகிறார். மாலை- தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.
பிரமோற்சவ 7வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு- சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.
பிரமோற்சவ 8வது நாள்: தேரோட்டம்- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.
பிரமோற்சவ 9வது நாள்: : கோவில் தெப்பக்குளமான புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும். பின்னர் கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறும்.