மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரில் இருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. அதுவே இரவு 11 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியத்துக்குள் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரைப்படி, ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தற்போது சென்யார் புயல் 2,600 கி.மீ தொலைவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவ.24ஆம் தேதி நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று (நவ.25) காலை 5.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் – இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியான நிலையில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும், பிற்பகலில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைம் தெரிவித்துள்ளது.

