மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (FC) புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியது. இந்தத் திடீர் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், கடந்த 90 நாட்களாக எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இதனால் முதற்கட்டமாக நாளை (பிப்ரவரி 16, திங்கட்கிழமை) முதல் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என சம்மேளன தலைவர் தனராஜ் மற்றும் செயலாளர் சாத்தையா ஆகியோர் அறிவித்துள்ளனர். மேலும், நாளை மறுநாள் நாமக்கல்லில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

