ஓட்டு திருட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதை தேர்தல் ஆணையர் நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக சிஐடி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கெடு விதித்துள்ளார்.
இன்றைய தினம் (செப்டம்பர் 18) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ” தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
ஆலந்த் தொகுதியில் கோதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி போலி Log in செய்து 12 வாக்காளரை நீக்கியுள்ளனர். அதற்கு வேறு வேறு மாநிலங்களில் இருந்து போன்நம்பரை பயன்படுத்தி உள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசியபோது நான் யார் பெயரையும் நீக்கவில்லை, விண்ணப்பமும் செய்யவில்லை எனக் கோதாபாய் பேட்டி அளித்துள்ளார்.
அதே நேரம், கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கே தெரியாமல் ஒரு கும்பல் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ரஜுரா தொகுதியில் 6850 போலி வாக்காளர்கள் இதே முறையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவல்களை தரும்படி பலமுறை கேட்டும், தலைமை தேர்தல் ஆணையர் அவற்றை அளிக்கவில்லை.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திட்டமிட்டே இந்த கும்பலைப் பாதுகாக்கிறார். எனது குற்றச்சாட்டுக்கு 100% ஆதாரம் உள்ளது. கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 2023ம் ஆண்டு நடத்த வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கில் தேவையான ஆதாரங்களை ஒரு வாரத்திற்குள் கர்நாடக சிஐடிக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்.
இல்லையெனில், நீங்கள் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவில்லை என்றே மக்கள் நம்புவார்கள்” என்று வலிறுத்திய அவர், கர்நாடக சிஐடி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.