கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று நொய்யல் ரயில்வே பாதை அருகே காலை உபாதைக்காகச் சென்றுவிட்டு, பாதையைக் கடக்க முயன்றார்.
அப்போது, எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் அவர்மீது மோதியது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் வேகமாக நகர முடியவில்லை.
ரயில் மோதியதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் ஓட்டுநர்கள் அளித்த தகவலின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நொய்யல் காவிரி ஆற்றங்கரை மயானத்தில் போலீசார் 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தியபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
17 ஆண்டுகள் ரயில்வே காவலராகப் பணியாற்றிய பன்னீர்செல்வம் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

