திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர்.
இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண் டை மாநிலமான கேரளா,பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து விட்டு முருகனை வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களுக்கு காரியம் முடித்துவிட்டு ஜலாகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வந்து அங்கு சடங்குகள் செய்கின்றனர்.
மேலும் தொடர்ந்து ஒரு வாரகாலமாக பெய்துவரும் கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துவிட்டு செல்பி எடுத்து கொண்டு செல்கின்றனர். மேலும் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு ஆற்றுக்கு செல்வதால் அருகே உள்ள கிராமங்களான பெருமாபட்டு, தாதவல்லி, மாடப்பள்ளி,செலந்தபள்ளி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடைகிறது. இதன் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.