Skip to content

அறிவுரை கூறியும் கேட்கவில்லை-அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்

விழுப்புரம் :மாவட்டம் தைலாபுரத்தில் செப்டம்பர் 11, 2025 அன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, பாமகவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த உட்கட்சி மோதல்களின் உச்சமாக பார்க்கப்படுகிறது.ராமதாஸ், தைலாபுரத்தில் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மற்றும் பிற முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படுகிறது,” என்று கூறினார். மேலும், “அன்புமணி ஒரு அரசியல்வாதியாக செயல்படுவதற்கு தகுதியற்றவர். அவரது செயல்கள் கட்சிக்கு எதிராகவும், அதன் கட்டமைப்பை சீர்குலைப்பதாகவும் இருந்தன,” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பாமகவை சேர்ந்தவர்கள் யாரும் அன்புமணியுடன் கட்சி சார்ந்த தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது அப்படி மீறி தொடர்பு வைத்தால் அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விரும்பினால் தனிக் கட்சி தொடங்கு என அன்புமணியிடம் 3 முறை கூறியுள்ளேன். இப்போதும் அன்புமணி தனியாக ஒரு கட்சியை தொடங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய ராமதாஸ் “அப்பா சொல்வதை கேளுங்கள் என்று மூத்தவர்கள் அறிவுரை கூறியும் அன்புமணி கேட்கவில்லை பாமவை அழிக்க அன்புமணி முயற்சி என்றும், நான் இல்லாமல் அன்புமணி மற்றும் அவருடன் இருப்பவர்கள் இந்த நிலைமைக்கு வளர்ந்திருக்க முடியாது எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளில், கட்சி விதிகளை மீறி தன்னிச்சையாக பொதுக்குழு கூட்டம் நடத்தியது, நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக பேசியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, மற்றும் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்டவை அடங்கும். ஆகஸ்ட் 9, 2025 அன்று மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவரது தலைவர் பதவி ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது, இது ராமதாஸ் தரப்பால் சட்டவிரோதமானது என்று கண்டிக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக, ஆகஸ்ட் 17 அன்று ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவர் தன்னை கட்சியின் தலைவராக அறிவித்து, அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். இதனையடுத்து, தற்போது கட்சியில் இருந்து நீக்கம் செய்ததாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, பாமகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி தரப்பு, இதற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

error: Content is protected !!