பாமகவில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் வெளிப்படையாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அன்புமணியை செயல்தலைவர் தான் என்று ராமதாஸ் அறிவித்தார். கட்சிக்கு நான் தான் தலைவர் என்றும் ராமதாஸ் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு நடந்தது. இதிலும், ராமதாசின் பேச்சில் கோஷ்டி பூசல் தெரிந்தது. கட்சியில் நான் தான் முடிவு எடுப்பேன். கூட்டணி குறித்தும் நான் தான் முடிவு செய்வேன் என்றார்.
இந்த நிலையில் இன்று தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டி இருந்தார். இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, சேலம் அருள் எம்.எல்.ஏ. ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர். 3 எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வரவில்லை. அன்புமணியும் வரவில்லை.
8 மாவட்ட செயலாளர்கள், 8 மாவட்ட தலைவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியில் மொத்தம் 100க்கும் அதிகமான மாவட்ட தலைவர்கள் உள்ள நிலையில், 8 பேர் மட்டுமே பங்கேற்றதால் ராமதாஸ் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் அவர்அதை வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
கூட்டம் தொடங்குவதற்கு முன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிலர் களைப்படைந்ததால் கூட்டத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். சட்டமன்ற தோ்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் பாமக இலக்கு. தனியாக நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதற்கான யோசனை சொல்லப்போகிறேன். கூட்டணியில் போட்டியிட்டால் அதிகம் வெற்றி பெறுவோம். செயல்தலைவர் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வரலாம் என எதிர்பார்க்கிறோம். வராத சிலர் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை. வராதவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை. எனவே சீற்றம் அதிகரித்திருக்கிறது. பஜனை கோஷ்டிகள் பாமவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர வேண்டும் என அன்புமணி விரும்புகிறார். இதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் தான் வன்னியர் சங்க மாநாட்டில் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் என அன்புமணிக்கு பதிலாகத்தான் கூறினார்.
இன்றைய கூட்டத்திலும் ராமதாஸ், அன்புமணி மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது. எனவே அன்புமணி பாஜக ஆதரவுடன் கட்சியையும், கொடி, சின்னத்தையும் கைப்பற்ற நடவடிக்கை எடுப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனாவை உடைத்தது போல இங்கும் பாமகவை உடைக்க, அந்த கட்சியே வழிவகுத்து விட்டதாக கூறப்படுகிறது.