மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர், 8வது தெருவில் உள்ள 40 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பிலிருந்து, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை உறுதி செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், உரிய காலத்திற்குள் நிலத்திற்கான ஆவணங்களை எதிர்தரப்பினர் சமர்ப்பிக்கவில்லை. இதனால், அப்பகுதியில் இந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சியின் இரண்டாவது மண்டல உதவி கமிஷனர் சாந்தி, வார்டு பொறியாளர் தன்யா ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகளை நேற்று மேற்கொண்டனர். மேலும், அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

