Skip to content

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர்.  இந்த தாக்குதல் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முற்படுவதும், அதனை இந்திய ராணுவம் முறியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியான சூழலில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் வராத காரணத்தால், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் ,  திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இன்னும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்திய பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.  அதுபற்றிய மேலும் தகவல்களை இப்போது கூற முடியாது என தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சித்தால் மீண்டும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். தற்போது உள்ள நிலைமையை மேலும் மோசமாக்குவது இந்தியாவின் நோக்கமல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!