டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 24-ம் தேதி இந்திராவைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களைச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேச பாதுகாப்பு விதிகளின் கீழ் பணமோசடி செய்ததாகக் கூறி, தம்பதி இருவர் மீதும் கைது வாரண்ட் இருப்பதாக மிரட்டியுள்ளனர். அங்கிருந்து ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) என்ற பெயரில் நேற்று (ஜனவரி 10) வரை அவர்களை வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளனர்.
இந்த 18 நாட்களில் தம்பதியின் மொபைல் எண்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த மோசடியாளர்கள், அவர்களைப் பயமுறுத்தியே பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பல தவணைகளாக மொத்தம் ரூ.14.85 கோடி பணத்தைப் பரிமாற்றம் செய்ய வைத்துள்ளனர். வங்கி அதிகாரிகள் சந்தேகப்பட்டு கேட்டபோது கூட, மிரட்டலுக்கு அஞ்சிய தம்பதியினர் ஏதேதோ காரணங்களைக் கூறிச் சமாளித்துள்ளனர்.
நேற்று தம்பதியை அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு மோசடியாளர்கள் கூறியுள்ளனர். அங்குச் சென்றபோதும் போலீசார் முன்னிலையில் அந்த மர்ம நபர்கள் அதிகாரத் தோரணையில் பேசியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் விசாரிக்கத் தொடங்கியதும் அவர்கள் இணைப்பைத் துண்டித்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர், வாழ்நாள் சேமிப்பு அனைத்தும் பறிபோனதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகைப் பறிபோயுள்ளதால், சைபர் பிரிவின் சிறப்புக் குழுவினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

