கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் நேரு இவரின் மாமனார் நாகராஜன். இவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின் பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சங்கரன் என்பவரில் தவறாக இருந்துள்ளது.
அதனை சரிசெய்ய மேற்படி நாகராஜன் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். இந்த மனுகுறித்து விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அறிக்கை அளிக்க விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளரான ராஜ்குமார் (39) நேருவிடம் கடந்த 03.12.2025ம் தேதி ரூ.15,000/- லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் நேரு இன்று (டிச.5) கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி புகார் மனு கொடுத்தார். அவரது புகார் மனு மீது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.
நேருவிடம் ரூ.15,000/- லஞ்சப்பணத்தை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் கேட்டு வாங்கியபோது அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் அழகேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் கைது செய்துள்ளனர்.

