திருச்சி மாவட்டத்தில் 8 திரையரங்குகளில் படம் நேற்று காலை 9 மணிக்கு வெளியானது. திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அருகே உள்ள ஒரு திரையரங்கில் திரைப்படம் வெளியானது. இதில் ரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் மேளதாளங்கள் முழங்க பாலாபிஷேகம் செய்தும் நடனமாடியும் கொண்டாடினர். அப்போது திரையரங்கை கடந்து
அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது பேருந்து செல்ல வழி விடாமல் சாலையின் நடுவே நின்று அஜித் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். அப்போது அரசு பேருந்தின் ஓட்டுனர் ராஜா வழிவிடுமாறு கூறியுள்ளார். மேலும் நடத்துநர் கிருஷ்ணாவும் பேருந்தை விட்டு இறங்கி இளைஞர்களிடம் வழிவிடுமாறு கூறியுள்ளார். உற்சாக மிகுதியில் இருந்த அஜித் ரசிகர்கள் ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த நடத்துனர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், யுவன் சங்கர் மற்றும் யுவராஜ் ஆகியோர் தான் நடத்துநரை தாக்கியது தெரியவந்தது. பாலமுருகன் ,யுவன் சங்கர் , யுவராஜ் ஆகிய மூன்று பேரையும் காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.
