கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்வரை, அரசியல் கட்சிகளின் சாலை பிரசாரம், சாலை வலத்திற்கு அனுமதி இல்லை என்று கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு இன்று விசாரித்தனர். விஜய் பரப்புரைக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக கூறி தவெக தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், புதிய விதிமுறைகளை விதிக்கும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை தெரிவித்துள்ளது.சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகளை பெற்று விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

