திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் நேற்று இரவு மதுபோதையில் ஒருவரையொருவர் சரமாரி தாக்கி கொண்டனர். இதில் மூர்த்தி பலத்த காயமடைந்தார்.
இந்த மோதல் குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல், தந்தை – மகன் சண்டையை விசாரிக்க வந்தார். அப்போது தந்தையும், மகனும் சேர்ந்து எஸ்.எஸ்.ஐயை தாக்கினர். அப்போது மூர்த்தியின் இளைய மகன் மணிகண்டனும் அங்கு வந்தார். பின்னர் தந்தை, 2 மகன்கள் சேர்ந்து எஸ்.எஸ்.ஐ சண்முகவேலை சரமாரி வெட்டியுள்ளனர். இதில் எஸ்.எஸ்.ஐ. அந்த இடத்திலேயே இறந்தார்.
குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். இறந்த எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய முதல்வர், சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன், இந்த கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.